Monday 20 January 2014

புலிகளை ஒடுக்கும் பொருட்டு இலங்கை பாதுகாப்பு படைகளுக்குப் பயிற்சி அளிக்க அனுமதித்த பிரித்தானிய அரசு!

sss191Monday, January 20, 2014
இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்குப் பயிற்சியளிப்பதற்கென பிரித்தானியாவின் முன்னாள் விசேட படையணி அதிகாரிகளுக்கு மார்கரட் தட்சரின் பிரித்தானிய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததனை பிரித்தானிய அரச ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன .
 

இதனை அம்பலப்படுத்தியுள்ள த கார்டியன் பத்திரிகை இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 1984 ஜுன் மாதம் இந்தியாவில் உள்ள சீக்கிய மதத்தவரின் புனித ஸ்தலமாகிய அம்ரித்சர் கோவில் வளாகத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கை வரையிலான காலப்பகுதியில் இந்தியப் துருப்பினருக்குப் பயிற்சியளிப்பதில் பிரித்தானிய விசேட படையணி அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்ததைக் காண்பிக்கும் ஆவணங்கள் வெளியாகிய சில தினங்களிலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

கடந்த 1984 ஆம் அண்டு செப்டெம்பரில் பிரித்தானியாவின் அப்போதைய வெளிநாட்டமைச்சர் ஜோப்ரி ஹோவின் பிரித்தியேக செயலாளர் பீட்டர் ரிக்கெட்ஸ் விசேட படையணியுடன் தொடர்புகளைப் பேணிவந்துள்ள பிரித்தானிய நிறுவனமொன்று இலங்கையில் பணியாற்றுவதனை அனுமதிக்குமாறு கோரும் வேண்டுகோள் ஒன்றைப் பற்றி பிரதமர் மார்க்ரெட் தட்சரின் பிரத்தியேகச் செயலாளர் டேவிட் பார்கிளேயுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார் . அந்தச் சமயத்தில் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களில்  புலிகளாலும் ஏனைய குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த கிளர்ச்சி நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்குவதற்கு ஜே . ஆர் . ஜெயவர்தனவின் அரசாங்கம் முயன்று கொண்டிருந்தது .

பீட்டர் ரிக்கெட்ஸ் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததாவது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலான பயிற்சியை வழங்குவதற்கென இன்னுமொரு பிரித்தானிய நிறுவனத்தை ( பெயர் நீக்கப்பட்டுள்ளது ) இலங்கை அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளது . இலங்கையில் முன்னாள் விசேட படையணி அதிகாரிகள் சிலர் உள்ளிட்ட குறித்த நிறுவனப் பணியாளர்களின் பிரசன்னமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் பிரஸ்தாப நிறுவனத்தின் சம்பந்தம் குறித்து இந்திய அரசாங்கம் எமக்கு விசனம் தெரிவித்துள்ளது . இது முற் - றிலும்

வர்த்தகம் சார்ந்த விடயமொன்றெனவும் விசேட படையணிகள் ( எச். எம் . ஜி ) இதில் சம்பந்தப்படவில்லையெனவும் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம் . குறித்த நிறுவனத்திற்கு இலங்கையில் தொடர்ந்தும் பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது .

அம்ரித்சர் சோதனை நடவடிக்கை சம்பந்தமான பிரித்தானியாவின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் டேவிட் கமரெனின் உத்தரவின் பிரகாரம் அமைச்சரவைச் செயலாளர் சேர் ஜெரமி ஹீவூட்டினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையொன்றின் போது இந்த ஆவணங்கள் சமர்பிக்கப்படவுள்ளன .

கடந்த 1984 ஜுனில் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்தியத் துருப்பினரால் மேற்படி கோவில் வளாகத்தினுள் மேற்கொள்ளப்பட்டிருந்த நீல நட்சத்திரம் என அழைக்கப்படும் ஆறு நாள் படை நடவடிக்கையின் போது சுமார் 400 பேர் கொல்லப்பட்டிருந்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது . சீக்கிய வரலாற்றில் இரத்தக்கறை படிய வைத்திருந்த மேற்படி படை நடவடிக்கையிலான பிரித்தானியப் படையணியினரின் வகிபாகம் குறித்து விசாரணையொன்றைக் கோரியுள்ள சீக்கியக் குழுக்கள் யாத்திரீகர்கள் பலர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளன .

 

No comments:

Post a Comment