Sunday 19 January 2014

ஜனாதிபதி மகிந்த ராஐபக்சவினால் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது!

Sunday, January 19, 2014
தெல்லிப்பழையில் “கலர்ஸ் ஒவ் கரேஜ்” அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், மேற்படி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
 
இப்புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக நிர்மாணிக்கும் பொருட்டு டிரைல் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் �மாஸ் இன்டிமேட்� நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாதன் சிவகணநாதன் மற்றும் அவரது நண்பர் சரித்த உனப்புவ ஆகியோர் தலைமையில் தெற்கே தெய்வேந்திரமுறை முதல் வடக்கே பருத்தித்துறை வரையில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டதன் பயனாக 300 மில்லியன் ரூபா நிதியினை சேகரித்திருந்தனர். 2011 ம் ஆண்டு தொடங்கப்பட்ட 670 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்தப் பாதயாத்திரையின் போது 35,000 பேர் கலந்து கொண்ட அதேவேளை 12 பேர் மட்டுமே முழுமையாக பங்கெடுத்திருந்தனர்.
 
2,50,000 பேர் வழி நெடுகிலும் இனமத பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து உதவிகளைப் புரிந்துள்ள நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
 
இவ்வைத்தியசாலை அமையப் பெற்றுள்ள காணியினை பிரபல தொழில் அதிபர் ஈ.எஸ்.பி நாகரட்ணம், உடுவிலைச் சேர்ந்த மாணிக்க சோதி அபிமன்னசிங்கம் ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
 
பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டமையப் பெற்றுள்ள இவ் வைத்தியசாலையில் பிரத்தியேகமான பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுவர் விடுதி, சிறுவர் பூங்கா என்பன அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 120 கட்டில்களும் போடப்பட்டுள்ளன.
 
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலையின் மூலமாக யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது வடக்குமாகாண மக்களும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வைத்தியசாலையினை ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் வைத்தியசாலையின் ஏனைய தொகுதிகளையும் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதனிடையே அதியுயர் கதிர்வீச்சு பிரிவு அமையப் பெறவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டி வைத்தார்.
 
முன்பதாக பிரதான வாயிலிலிருந்து மங்கள வாத்தியம் சகிதம் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அவர்கள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க சகிதம் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்;டார்.
 
அரங்க நிகழ்வில் புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிர்மாணப் பணிக்கான நடைபயணம் தொடர்பில் டிரைல் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும், மாஸ் இன்டிமேட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாதன் சிவகணநாதன் மற்றும் சரித்த உணப்புவ ஆகியோர் விளக்கமளித்தனர்.
அத்துடன், நடைபயணத்தை தொடங்கி இறுதிவரை நிறைவு செய்த 12 பேருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் கவர்ஸ் ஒப் கரேஜ் விருது வழங்கி கௌரவித்தார்.
 
இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), பாராளுமன்ற உறுப்பினர் சிரான் விக்கிரமரட்ன, ஹர்ஸ டி சில்வா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment