Monday 24 March 2014

சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் இலங்கையை புரிந்து கொண்டுள்ளனர்

Monday, March 24, 2014
சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் இலங்கையை புரிந்து கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே இலங்கை அடைந்த வெற்றியாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் சமரசிங்க, ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நாடு அடைந்துள்ள அபிவிருத்திகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு வெற்றிகரமாக விளக்கம் அளிக்க முடிந்துள்ளமையே இந்த பிளவிற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநேகமான நாடுகள் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு பதிலடி கொடுக்க முடியும் - ஜனாதிபதி!

Monday, March 24, 2014
 மாகாணசபைத் தோதல் முடிவுகளின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு பதிலடி கொடுக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 29ம் திகதி மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு நாட்டின் வாக்காளர்கள் பதிலடி கொடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியை அமோக வெற்றியடையச் செய்வதன் மூலம், சர்வதேச சமூகத்திற்கு வலுவான ஓர் செய்தியை சொல்ல முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஆதரவு யாருக்கு காணப்படுகின்றது என்பதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரானதல்ல எனவும், பயங்கரவாதிகளுக்கு எதிரானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் மூலம்; ஈட்ட முடியாத வெற்றியை சர்வதேச சமூகத்தின் ஊடாக ஈட்டிக்கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Sunday 23 March 2014

யஸ்மின் சூகா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, தருஸ்மான் அறிக்கையின் நேர்மைத் தன்மை: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம!

Sunday, March 23, 2014
தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின்  சூகா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, தருஸ்மான் அறிக்கையின் நேர்மைத் தன்மை எந்தளவானது என்பதை புடம்போட்டு காட்டுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தோனேசியாவின் தருஸ்மான் தலைமையிலான நிபுணத்துவ குழு ஒன்றை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.
இந்தக் குழுவில் சட்டத்தரணி யஷ்மின் சூகாவும் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் பிரித்தானிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த அறிக்கை பக்கச்சார்பானது என்றும், இதில் நேர்மையான தரவுகள் காண்பிக்கப்படவில்லை என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
எனவே இதேபோன்றுதான் தருஸ்மான் அறிக்கையும் நேர்மையற்றதாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Saturday 22 March 2014

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை வருத்தமளிக்கின்றது: அமெரிக்கா!

Saturday, March 22, 2014
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சொந்த நாட்டின் தைரியமான பிரஜைகளுக்கு எதிராக தண்டனை விதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றமை கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்காக தைரியமாக குரல் கொடுக்கும் சொந்தப் பிரஜைகள் ஒடுக்கப்படுகின்ற வகையிலான செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அழுத்தங்கள் உக்கிரமடைந்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜேன் பாஸ்கீ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவநீதனிடம் மு.கா. கையளித்த அறிக்கையில் யுத்த கால இழப்புகளும் உள்ளடங்கியுள்ளன!

Saturday, March 22, 2014
இந்த நாட்டில் தேர்தல் திணைக்களத்தால் பதியப்பட்ட 42 அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் முஸ்லீம் என்ற வசனத்தினை பிரதிபலிக்கின்ற ஒரே ஒரு கட்சி முஸ்லீம் காங்கரிஸ் கட்சி மட்டுமே என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரசின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெஹிவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஆனால் சிலர் முஸ்லீம் காங்கிரஸ் ஊடாக வந்து அக் கட்சியில் இருந்து விலகி அஸ்ரப் காங்கிரஸ, தேசிய முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், கிழக்கு முஸ்லீம் காங்கிரஸ் என பல கட்சிகள் தோற்றுவித்தார்கள். எனினும் முஸ்லீம் என்ற பதத்தை வைத்திருந்தால் நாம் இனவாதி எனக் காட்டப்படுவோம என பயந்து முஸ்லீம் என்ற பதத்தையே நீக்கிவிட்டார்கள்.

முஸ்லீம் என்று கட்சியை சொல்வதற்கே கூச்சப்படுபவர்கள் எவ்வாறு இந்த நாட்டின் வாழும் முஸ்லீம்களின் பிரச்சினையைகளைப் பேசப்போகின்றார்கள்? இவ்வாறானவர்கள் எவ்வாறு முஸ்லீம்களிடம் போய் வாக்கு கேட்க முடியும்.

வட கிழக்கில் இருந்த ஆயுதக்குழுக்களிடமிருந்த ஆயுதங்கள் அப்போதைய காலத்தில் முஸ்லீம் ;இளைஞர்களையும் கவர்ச்சி காட்டியது. அதனால் அன்று முஸ்லீம் வாலிபர்களும் அவ் இயங்கங்களில் சேருவதற்கு ஆர்வங்காட்டினார்கள். ஒரு சில இளைஞர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.

அந்த தருனத்தில்தான் மறைந்த தலைவர் எம். எச்.எம் அஸ்ரப் அவர்கள் முஸ்லீம் இளைஞர்களை வழிமறித்து இந்த முஸ்லீம் போராட்ட இயக்கத்தினை ஆரம்பித்து அவர்களை ஒன்று திரட்டினார்.

வட கிழக்கில் முஸ்லீம்களுக்கு நடைபெற்ற அநீதிகள், யுத்தம் முடிவடைந்த பிறகு அதிதீவிர போக்குடைய பௌத்த குழுக்களின் தாக்குதல் கொண்ட அறிக்கையை நவநீதம் பிள்ளையிடம் கையளிக்கச் சென்றபோது நவநீதம் பிள்ளையின் கொழும்பில் உள்ள ஜ.நாடுகள் ஏற்பாட்டாளர்கள் அரசில் இருக்கும் யாரையும் சந்திக்க முடியாது- அதற்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது- நீங்கள் சந்திப்பதென்றால் அரசின் அனுமதி பெற்று வாருங்கள் எனத் தெரிவித்தனர்.

ஆனாலும் நவநீதம் பிள்ளை பயணிக்க 1 மணித்தியாலம் முன் அவரைச் சந்தித்து இந்த அறிக்கையை மட்டும் நான் கையளிக்க வேண்டும் என கொழும்பில் உள்ள ஜ.நா. இலங்கைக்கான பணிப்பாளரிடம் அவகாசம் கேட்டேன். அதன் பின்னரே இந்த அறிக்கையை நவநீதம்பிள்ளையை சந்தித்து கையளித்தேன்.

அவர் அதனை மேலோட்டமாக வாசித்து விட்டு உரிய நடவடக்கை எடுப்பதாக அந்த அறிக்கையை அவர் எடுத்துச் சென்றார்.

அந்த அறிக்கையில் வட கிழக்கு யுத்த காலத்தில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட சகல சம்பவங்களும் அடங்கப் பெற்றுளளன. அதில் ஹஜ்ஜூக்கு சென்று காணமல் போனவர்கள் தொட்டு காத்தான்குடி, ஏறாவுர், வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றம் என பல தகவல் அதில் அடங்குகின்றன.
யுத்தத்திற்குப் பிறகு இந்த அரசின் நடவடிக்கையினால் அதிலும் அம்பாறை மாவட்டத்திலும் மட்டும் முஸ்லீம்களுக்குரிய காணி 35ஆயிரம் ஏக்கர் காணியை இழந்துள்ளோம்.

இதே போன்று அம்பாறை, திருமலை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் முஸ்லீம்களுடைய இருப்புகள் யுத்தத்தின் பின்பும் முன்பும் அபகரிக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள காட்டுவள திணைக்களம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்,விவசாய முதலீட்டு, பௌத்த ஆராச்சி என பல்வேறு திணைக்களங்கள் ஒன்று சேர்ந்து அம்பாறை மாவட்டத்தில் காணிகளை அபகரித்துள்ளன.

இதனை அரசுடன் பேசினாலும் அதிகாரிகள் அரச திணைக்களங்கள் ஊடாக முஸ்லீம்களது காணிகள் அபகரிக்கப்பு தொடரவே செய்கிறது” என ஹசன் அலி தெரிவித்தார்.

Thursday 6 March 2014

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: தேர்வாளர்கள் பட்டியலில் புதின் மற்றும் ஸ்நோடெனின் பெயர்கள் இடம்பிடித்தது!

Thursday, March 06, 2014
 இந்த ஆண்டின் அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசுக்கான தேர்வாளர்கள் பட்டியலில் இடம்பெறுபவர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது என்று நார்வே மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த நோபல் பரிசு கமிட்டி நேற்று குறிப்பிட்டுள்ளது.
இதில் அமெரிக்காவின் ரகசியத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்நோடென், பாகிஸ்தானின் பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போன்றோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டுதோறும் இந்த தேர்வு பட்டியலில் இடம்பெறுவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது நோபல் பரிசின் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள ஆர்வத்தைக் குறிப்பிடுவதாக, நோபல் நிறுவனத்தின் தலைவரான கிர் லுண்டேஸ்டட் கூறினார். தங்களின் கமிட்டி தேர்வாளர்கள் பட்டியலை ஆய்வு செய்து, தேர்வு செய்யப்படுவோரின் பெயர்களை ஆஸ்லோவில் வரும் அக்டோபர் 10ம் தேதியன்று அறிவிக்க இருப்பதாக அவர் கூறினார். இவ்வாறு தேர்வு பெறுபவர்களின் பெயர்கள் முன்கூட்டி அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

வழக்கம்போல தேர்வாளர்களின் விபரங்களை அறிவிக்க மறுத்த அவர், அமைதி விருதுக்கு வந்திருக்கும் 278 தேர்வாளர்களில் 47 நிறுவனங்களின் பெயர்களும் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். பொதுவாக இந்த தேர்வாளர்கள் பட்டியல் 50 வருடங்களுக்கு ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
தேர்வுக் கமிட்டியின் முதல் சுற்றில்கூட பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படக்கூடும். ஆனால், இதுமட்டுமே கமிட்டியின் ஒப்புதலுக்கான அறிகுறி ஆகாது என்று இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமல் அந்நாட்டின் ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டின்கீழ் அழிக்க முயற்சி மேற்கொண்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் அமைதிக்கான விருதுப் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், தற்போது உக்ரைனின் கிரிமியா பகுதியில் ரஷ்யா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சிகள், புதினுக்கு இந்த விருது கிடைப்பதற்கு எதிரானதாக அமையக்கூடும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன.

சட்டவிரோதமாக இயங்கும் விடுதிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை வடக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும்- யாழ் மாநகர முதல்வர்!

Thursday, March 06, 2014
யாழ். மாநகர சபை எல்லைக்குள் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இயங்குகின்ற விடுதிகளுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று வடக்கு மாகாணம் முழுவதிலும் சட்டவிரோதமாக இயங்குகின்ற விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமென்றும், இதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் அனுமதி பெறப்பட்ட விடுதிகள் இயங்கி வருகின்ற அதே வேளையில், அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமான முறையிலும் சில விடுதிகள் இயங்கி வருகின்றன். இத்தகைய விடுதிகளிலிலேயே சட்டவிரோத மற்றும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.

குறிப்பாக, மாநகர எல்லைக்குள்ள இவ்வாறு இயங்கிய சில விடுதிகள் கடந்த வருடத்திலும் கண்டறியப்பட்டிருந்தது. அதேபோன்று கடந்த வாரமும் சில விடுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, இந்த விடுதிகளில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.

இதற்கான ஆதாரங்கள் தேவையாக இருந்த நிலையில், இந்த விடுதி மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இதற்குரிய ஒத்துழைப்பை வழங்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமையவே சபை அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கலாச்சாரச் சீரழிவு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய சமூக விரோதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது.

இதற்கமைய இவ்வாறான காலாசார சீரழிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர வேண்டும். இதற்கு சமூகத்திலுள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். இவ்வாறான கலாச்சாரச் சீரழிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மாநகர எல்லையில் மட்டுமல்லாது, மாவட்ட ரீதியாக வடக்கு மாகாணம் முழுவதுமே மேற்கொள்ள வெண்டும்.

தமிழ் மக்களின் பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது. இதற்கமைய இதணை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமென மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என் மீது பாய்ந்து விழுந்தார் என்பதற்காக நான் வீட்டில் போய் மூலையில் முடங்கிக் கிடக்க முடியாது- ரவூப் ஹக்கீம்!

Thursday, March 06, 2014
உபாய ரீதியாக அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை விட, நாங்கள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தான் அரசாங்கம் எங்களது பலத்தை சரிவர புரிந்து கொள்ளும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

மேல் மாகாணத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் மரச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கஹட்டோவிட்ட கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீம் உட்பட ஏனைய வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்ட அக் கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

இந்த மேல் மாகாண சபைத் தேர்தலிலும் நாங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்த வேளையில், கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தலைமைத்துவம் வகிக்கும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ என்னிடம் அவர்களுடன் சேர்ந்து கூட்டாகப் போட்டியிடுவதானால் வரவேற்கத்தக்கது என்றும் அது பற்றி ஆலோசிக்க முடியுமா என்றும் கேட்டார்.

முதலமைச்சர் வேட்பாளரிடமிருந்தும் அது தொடர்பில் தமக்கு அழுத்தம் தரப்படுவதாக எமது முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீமும் என்னிடம் கூறினார்.

ஆனால் களநிலவரத்தின் யதார்த்தத்தைப் பொறுத்தவரை, நாங்கள் தனித்துப் போட்டியிடாமல் அரசாங்க கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவது எங்களது ஆசனத்தை இழப்பதற்கே வழிகோலும். நாங்கள் தனித்துப் போட்டியிடுவதில் பிடிவாதமாக இருந்தோம்.

ஆனால் அரசாங்கத்திற்கு அது அஜீரணமாக இருந்தது.
உபாய ரீதியாக அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை விட, நாங்கள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தான் அரசாங்கம் எங்களது பலத்தை சரிவர புரிந்து கொள்ளும்.

அரசாங்க கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு தோற்றுப் போவதால் அபிவிருத்தி வேலைகளை எங்களுக்கு வழமையாக செய்வதை விட சற்றுக் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு தார்மீக கடமை அவர்களுக்கு ஏற்படலாம்.
ஆயினும், இந்த சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அதை விட முக்கியமானது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து அவர்களுக்கு குற்றேவல் புரியும் சுயநலவாதிகளாக சமூகம் எங்களை பார்க்க விரும்பவில்லை.

இந்தக் கட்சி பலமாகவும், தனது பேரம் பேசும் சக்தியை கொண்டதாகவும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதை நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகளும் ஆதரவாளர்களும் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.

அரசாங்க ஆதரவாளர்களுக்கு இதில் ஆட்சேபனை இல்லை. குறிப்பாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காரர்களுக்கு அதை ஜீரணிக்க முடியா விட்டாலும், பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அது வரவேற்கத்தக்கது அல்லதென்பதை களநிலவரம் உணர்த்துகின்றது.

ஒவ்வொரு தேர்தல்களுக்கு முன்பும் அரசில் உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டி ஆராயும் போது எனது பாடுதான் திண்டாட்டமாகிப் போகிறது. அரசாங்கத்தில் இருந்து வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு, தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் விளையாட்டை வைத்துக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி வற்புறுத்திக் கூறுவதுண்டு.

தனித்துக் போட்டியிட்டாலும் அரசாங்கத்தை விமர்சிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு முக்கிய அமைச்சர் ஒருவர் என்னிடம் வினயமாக கேட்டுக் கொண்டார். அரசுக்கும், முஸ்லிம் காங்கிரஸூக்கும் மீண்டும் லடாய் என்றொரு வதந்தி வேகமாக பரவி வருகிறது.

ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேச வேண்டிய விடயங்கள் இருந்தாலும், இந்த சமூகத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் அயராது ஈடுபட்டிருக்கும் இயக்கம் என்ற காரணத்தினால், நாங்கள் தனித்துப் போட்டியிடும் விவகாரம் ஆளும் கூட்டமைப்பு உள்ளவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சந்தர்ப்பவாத கட்சியாக தென்படுகின்றது.

அதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அரசியல் வாதிகள் சிலர் எங்களை தாறுமாறாக விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி ஒரு முழம் பாய்ந்தால் அவர்கள் பத்து முழம் பாய்கிறார்கள்.

அதற்கென முகவரி இல்லாத முஸம்மில் என்ற ஆசாமி ஒருவரை வைத்திருக்கிறார்கள். அந்த நபரை நான் கொஞ்சம் கூட கணக்கில் எடுப்பதில்லை. அமைச்சர் விமல் வீரவங்ச அவருக்கு ஊடக பேச்சாளர் என்ற பதவியை வழங்கி, என்னையும் எமது கட்சியையும் தாக்குவதற்கென்றே அவரைத் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறார்.

முஸ்லிம் பெயர் தாங்கிய ஒருவரை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸை மட்டம் தட்டி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். அப்படியானாவர்கள் பேசப் பேச முஸ்லிம் காங்கிரஸின் மதிப்பு மேலும் மேலும் முஸ்லிம்கள் மத்தியில் உயர்ந்து செல்கிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை.

முஸ்லிம் சமூகத்துடைய இன்றைய உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் எங்களுக்கு எதையும் செய்யா விட்டாலும் பரவாயில்லை, சமூகத்திற்கு நடக்கின்ற அநியாயங்களை காரசாரமாக பேச வேண்டும் என்பதுதான்.
அரசாங்கத்துக்கு உள்ளே இருந்து கதைக்கும் பொழுது எல்லா விடயங்களும் வெளியில் வருவதில்லை.

ஏனென்றால், நாங்கள் அவற்றை வெளியில் வந்து கூறுவதால் இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகி விடும் என்பது மட்டுமல்ல, எங்களைக் காட்டிக்கொடுப்பதற்கு என்றே அரசாங்கத்துக்குள் ஒரு கூட்டம் இருக்கிறது.
இந்தப் பின்னணியில் தான் இப்பொழுது ஜெனீவா விவகாரம் பற்றி ஒரு பெரிய புரளி கிளப்பப்பட்டிருக்கிறது. இது எல்லோரும் அறிந்த விடயம். ஓளித்து மறைத்து பேச வேண்டிய விடயமல்ல.

இன்றைய முன்னேறிவரும் தகவல் தொழிநுட்ப யுகத்தில் ஓரிடத்தில் நடக்கும் சம்பவம் பற்றிய செய்தி உடனடியாக உலகெங்கும் சென்று விடுகிறது.

அரபு நாடுகள் மத்தியில் வித்தியாசமான நிலைப்பாடு ஏற்பட்டு விட்டதென வீணாக எங்களோடு இங்குள்ள அரசியல்வாதிகள் சிலர் கோபிக்கிறார்கள். பொதுபல சேனா, சிஹல ராவய, ராவணா பலய போன்ற இனவாத கும்பல்களின் தீவிரவாதம் வளர்வதற்கு இலங்கை களமாக மாறிவிட்டதென்ற செய்தி அரபு உலகில் நவீன தொழில்நுட்ப வலைப்பின்னல் ஊடாகப் பரவியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.

நாங்கள் சொல்லித்தான் ஏனைய நாடுகள் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்பதல்ல. இராஜதந்திர ரீதியாக இவ்வாறான இனவாத, தீவிரவாத நடவடிக்கைகள் இலங்கையை பாதிப்படையச் செய்யும் என்பதை நான் அரபு நாட்டு பத்திரிகைகளை சுட்டிக்காட்டி வெளிவிவகார அமைச்சரிடம் கூறியிருந்தேன்.

இவ்வாறிருக்க இன்று முஸ்லிம் காங்கிரஸின் மீது மட்டும் குற்றம் சுமத்துவது அல்லது பழியை போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
இந்த அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருப்பது பற்றி இன்று எமது சமூகத்தில் எவ்வளவுதான் கசப்புணர்வு இருந்தாலும், இந்த இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது மிகவும் பிரதானமான விஷயம்.
அரசாங்கத்துக்கு வெளியில் இருப்பது ஆபத்தானது என நியாயமாக சிந்திக்கும் முஸ்லிம்கள் பலர் நினைக்கிறார்கள். வெளியில் இருக்கின்ற பொழுது வரும் பாதிப்புகளை விட, அரசாங்கத்திற்குள் இருக்கும் போது அவை பற்றி கதைப்பதற்காகவது யாராவது உள்ளே இருந்தாக வேண்டும் என்பது காலத்தின் நிர்ப்பந்தம் ஆகும்.

ஆனால், இந்த யதார்த்தங்களை நாங்கள் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். சாணக்கியமாக விடயங்களை அணுக வேண்டும். அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால், அந்த முரண்பாடுகளை பெரிதுபடுத்தி. தூக்கிப்பிடிப்பது முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமல்ல.

ஜனாதிபதி என்மீது கோபப்பட்ட போது நான் அவரிடம் சொன்னதெல்லாம், அது நான் மட்டும் சொல்வதல்ல, பலரும் கூறுகின்ற விடயம் என்பதுதான். அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் கேட்டால் தெரியவரும் என்றேன். என்னோடு காரசாரமாக பேசிய பின்னர் அவரது சகோதரர் பெசில் ராஜபக்ஷ அதுபற்றி என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.

எங்களைப் பொறுத்தவரை களநிலவரங்களைப் பற்றி உண்மைகளைச் சொல்ல வேண்டும். சில உண்மையான தகவல்களை வழங்கியது தவறான விடயமல்ல.

ஜம்இய்யதுல் உலமா, ஷூரா சபை, முஸ்லிம் இயக்கங்களின் ஒன்றியம் என்பவற்றின் பிரதிநிதிகள் எல்லா விடயங்களையும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸை அழைத்து கேட்ட போது எல்லாத் தகவல்களையும் கூறியிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இன்று மிகப்பெரிய வெறுப்பு உருவாகியிருக்கிறது எனக் கூறப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி என்னோடு கோபித்துக் கொண்டு சூடாக பேசிய உடனேயே நான் அமைச்சர் பீரிஸிடம் சென்று உங்களைச் சந்தித்தவர்கள் கூறிய உண்மைகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே என்றேன்.

ஏனென்றால் இரண்டொரு வருடங்களாக தலைதூக்கி வருகின்ற இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத இயக்கங்கள் இந்தச் சமூகத்திற்கு ஒரு பாரிய அச்சுறுத்தல் மாத்திரமல்ல, அதன் விளைவாக இந்தச் சமூகம் அரசாங்கத்திலிருந்து தூர விலகிச் செல்கின்ற நிலைமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது என்ற விடயம் அமைச்சர் பீரிஸூக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி கோபப்பட்டு காரசாரமாக பேசிவிட்டார் என்பதற்காக நான் வீட்டில் போய் மூலையில் முடங்கிக் கிடக்க முடியாது. அதைப் பற்றி எந்த கலக்கமும் இல்லாமல், பதற்றமும் இல்லாமல் நேர்மையாகவும் பக்குவமாகவும் விடயங்கள் சொல்லப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கிறேன்.
நாட்டில் ஒரு நல்லிணக்கம் வரவேண்டும், நாட்டில் நடக்கின்ற எல்லை மீறிய அசம்பாவிதங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

எமது கட்சி அரசாங்கத்தோடு இணைவதில் பாரிய அதிருப்தி இருந்தது. கட்சி உறுப்பினர்களை பறிகொடுத்து விடக் கூடாதென்பதற்காகத்தான் நாம் அரசாங்கத்தோடு இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தான் கட்சியின் பலம். எங்களிடம் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் எங்களிடம் இருந்து பறிபோய் விட்டால் நிலைமை என்ன? இந்தக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடேயே நாம் அரசில் இருக்கிறோம்” என்றார்.

Wednesday 5 March 2014

தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்வதனை தடுத்த மூவர் கைது!

Wednesday, March 05, 2014
தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்வதனை தடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு நீதிமன்றம் குறித்த மூவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இரண்டு மகள்களையும் இராணுவத்தில் இணைக்க விரும்பிய தந்தையை மூ தாக்க முற்பட்டதாகவும் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தில் சேர்வதற்கு மகள்களுக்கு அனுமதி வழங்கிய தந்தையை குறித்த மூன்று பேரும் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியொருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 10ம் திகதி மீண்டும் நடத்தப்பட உள்ளது.