Sunday 27 April 2014

புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சி: நெடியவனுக்கு சிவப்பு எச்சரிக்கை! - இணையத்தில் வெளியிட்டது இன்டர்போல்!

Sunday, April 27, 2014
நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கை விதித்துள்ளது. இலங்கையில்  புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நெடியவன் மீது குற்றம் சுமத்தியுள்ளது. 

நெடியவனை கைது செய்வதற்கான உதவியை சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளதாக இலங்கை பொலிஸார் இம்மாத ஆரம்ப பகுதியில் அறிவித்திருந்தனர். இதற்கமைய நெடியவனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

நெடியவன் தொடர்பிலான சிகப்பு எச்சரிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என அண்மையில் நோர்வே தெரிவித்திருந்தது. எனினும், தற்போது சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் நெடியவனது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday 1 April 2014

புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பு!

Tuesday, April 01, 2014
இலங்கை::புலிகளுடன் தொடரப்புடையவை எனத் தெரிவித்து குறைந்த பட்சம் பதினைந்து சர்வதேச அமைப்புக்களைப் பட்டியலிட்டு தடை செய்து இலங்கை அரசு வர்த்தமானியில் அறிவித்திருக்கின்றது

புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று பட்டியல்படுத்தி தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேரணை வெற்றிபெற்ற நிலையில்,  இந்த தீவிர நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இந்தப் பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.
இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும்
புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த இயக்கங்களில் நியுயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;, கத்தோலிக்க அருட்தந்தை. இமானுவேலின் உலகத் தமிழர் பேரவை, நெடியவனின் புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்;கும்.
இந்த முழு விபரங்கள அடங்கிய  அறிவிப்பு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசினால் இந்த வாரம் வெளியிடப்படும் என தெரிய வருகிறது.

புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடைசெய்யப்படுகின்றன. இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்.
முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:

1.    நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்
2.    கத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3.    விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4.  விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி
இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடைசெய்யப்படவுள்ள அமைப்புக்கள்.
1. தமிழீழ விடுதலை புலிகள் LTTE
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் .
3. தமிழர் ஒருங்கிணைப்பு குழு
4. பிரித்தானிய தமிழர் பேரவை - BTF
5. உலக தமிழர் இயக்கம்
6. கனேடிய தழிழ் காங்கிரஸ்
7. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
8. உலக தமிழ் மன்றம்
9. கனேடிய தமிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தமிழ் பேரவை
11. தமிழ் இளைஞர் அமைப்பு
12. உலக தமிழர் ஒருங்கமைப்பு குழு
13. தமிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14. தமிழீழ மக்கள் கூட்டம்
15. உலக தமிழ் நிவாரண நிதியம்
16. தலைமை காரியாலய குழு
ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்படவுள்ளது.
 
Thak you - Courtesy : poonththalir.blogspot.com

வீட்டுத்தொகுதிகளின் நிர்மாணப்பணிகள் பாதுகாப்பு செயலாளரினால் மேற்பார்வை!

 Tuesday, April 01, 2014
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (மார்.28) கொழும்பு பிரதேசத்தில் நிறைவுறும் தறுவாயிலுள்ள வீட்டுத் தொகுதியின் பணிகளை மேற்பார்வை செய்தார்.

இம் மேற்பார்வை விஜயத்தின் போது எதிரிசிங்க மாவத, சிரில் சீ பெரேரா மாவத மற்றும் போகஸன் வீதி வீடமைப்புத் திட்டங்களை செயலாளர் மேற்பார்வை செய்தார்.

இவ்வீட்டுத் திட்டமானது பாதுகாப்பு செயலாளரின் நேரடி கண்காணிப்பிலும் வழிகாட்டலின் கீழும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வீட்டுத் திட்டமானது குறைந்த வசதிகளுடன் வாழும் சேரிப்புற மக்களுக்கு வழங்கப்படுவதோடு கொழும்பை சேறிப்புறமற்ற நகரமாக மாற்றும் அரசின் வாக்குறுதிக்கமைய இவை முன்னெடுத்துச் செல்லப்படுவது சிறப்பம்சமாகும்.

தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் ஆதரவளிக்கத் தயாரில்லை - ஃபொன்சேகா!

Tuesday, April 01, 2014
 பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மிகவும் பொருத்தமான ஒருவரை தேர்தலில் போட்டியிடச் செய்ய எதிர்க்கட்சிகள் முனைப்பு எடுத்தால், ஜனநாயகக் கட்சி முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் ஆதரவளிக்கத் தயாரில்லை எனவும் அவர், பொதுவான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்தலில் ஈட்டியுள்ள வெற்றி மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Monday 24 March 2014

சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் இலங்கையை புரிந்து கொண்டுள்ளனர்

Monday, March 24, 2014
சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் இலங்கையை புரிந்து கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே இலங்கை அடைந்த வெற்றியாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் சமரசிங்க, ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நாடு அடைந்துள்ள அபிவிருத்திகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு வெற்றிகரமாக விளக்கம் அளிக்க முடிந்துள்ளமையே இந்த பிளவிற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநேகமான நாடுகள் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு பதிலடி கொடுக்க முடியும் - ஜனாதிபதி!

Monday, March 24, 2014
 மாகாணசபைத் தோதல் முடிவுகளின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு பதிலடி கொடுக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 29ம் திகதி மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு நாட்டின் வாக்காளர்கள் பதிலடி கொடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியை அமோக வெற்றியடையச் செய்வதன் மூலம், சர்வதேச சமூகத்திற்கு வலுவான ஓர் செய்தியை சொல்ல முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஆதரவு யாருக்கு காணப்படுகின்றது என்பதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரானதல்ல எனவும், பயங்கரவாதிகளுக்கு எதிரானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் மூலம்; ஈட்ட முடியாத வெற்றியை சர்வதேச சமூகத்தின் ஊடாக ஈட்டிக்கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Sunday 23 March 2014

யஸ்மின் சூகா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, தருஸ்மான் அறிக்கையின் நேர்மைத் தன்மை: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம!

Sunday, March 23, 2014
தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின்  சூகா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, தருஸ்மான் அறிக்கையின் நேர்மைத் தன்மை எந்தளவானது என்பதை புடம்போட்டு காட்டுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தோனேசியாவின் தருஸ்மான் தலைமையிலான நிபுணத்துவ குழு ஒன்றை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.
இந்தக் குழுவில் சட்டத்தரணி யஷ்மின் சூகாவும் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் பிரித்தானிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த அறிக்கை பக்கச்சார்பானது என்றும், இதில் நேர்மையான தரவுகள் காண்பிக்கப்படவில்லை என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
எனவே இதேபோன்றுதான் தருஸ்மான் அறிக்கையும் நேர்மையற்றதாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Saturday 22 March 2014

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை வருத்தமளிக்கின்றது: அமெரிக்கா!

Saturday, March 22, 2014
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சொந்த நாட்டின் தைரியமான பிரஜைகளுக்கு எதிராக தண்டனை விதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றமை கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்காக தைரியமாக குரல் கொடுக்கும் சொந்தப் பிரஜைகள் ஒடுக்கப்படுகின்ற வகையிலான செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அழுத்தங்கள் உக்கிரமடைந்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜேன் பாஸ்கீ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவநீதனிடம் மு.கா. கையளித்த அறிக்கையில் யுத்த கால இழப்புகளும் உள்ளடங்கியுள்ளன!

Saturday, March 22, 2014
இந்த நாட்டில் தேர்தல் திணைக்களத்தால் பதியப்பட்ட 42 அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் முஸ்லீம் என்ற வசனத்தினை பிரதிபலிக்கின்ற ஒரே ஒரு கட்சி முஸ்லீம் காங்கரிஸ் கட்சி மட்டுமே என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரசின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெஹிவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஆனால் சிலர் முஸ்லீம் காங்கிரஸ் ஊடாக வந்து அக் கட்சியில் இருந்து விலகி அஸ்ரப் காங்கிரஸ, தேசிய முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், கிழக்கு முஸ்லீம் காங்கிரஸ் என பல கட்சிகள் தோற்றுவித்தார்கள். எனினும் முஸ்லீம் என்ற பதத்தை வைத்திருந்தால் நாம் இனவாதி எனக் காட்டப்படுவோம என பயந்து முஸ்லீம் என்ற பதத்தையே நீக்கிவிட்டார்கள்.

முஸ்லீம் என்று கட்சியை சொல்வதற்கே கூச்சப்படுபவர்கள் எவ்வாறு இந்த நாட்டின் வாழும் முஸ்லீம்களின் பிரச்சினையைகளைப் பேசப்போகின்றார்கள்? இவ்வாறானவர்கள் எவ்வாறு முஸ்லீம்களிடம் போய் வாக்கு கேட்க முடியும்.

வட கிழக்கில் இருந்த ஆயுதக்குழுக்களிடமிருந்த ஆயுதங்கள் அப்போதைய காலத்தில் முஸ்லீம் ;இளைஞர்களையும் கவர்ச்சி காட்டியது. அதனால் அன்று முஸ்லீம் வாலிபர்களும் அவ் இயங்கங்களில் சேருவதற்கு ஆர்வங்காட்டினார்கள். ஒரு சில இளைஞர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.

அந்த தருனத்தில்தான் மறைந்த தலைவர் எம். எச்.எம் அஸ்ரப் அவர்கள் முஸ்லீம் இளைஞர்களை வழிமறித்து இந்த முஸ்லீம் போராட்ட இயக்கத்தினை ஆரம்பித்து அவர்களை ஒன்று திரட்டினார்.

வட கிழக்கில் முஸ்லீம்களுக்கு நடைபெற்ற அநீதிகள், யுத்தம் முடிவடைந்த பிறகு அதிதீவிர போக்குடைய பௌத்த குழுக்களின் தாக்குதல் கொண்ட அறிக்கையை நவநீதம் பிள்ளையிடம் கையளிக்கச் சென்றபோது நவநீதம் பிள்ளையின் கொழும்பில் உள்ள ஜ.நாடுகள் ஏற்பாட்டாளர்கள் அரசில் இருக்கும் யாரையும் சந்திக்க முடியாது- அதற்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது- நீங்கள் சந்திப்பதென்றால் அரசின் அனுமதி பெற்று வாருங்கள் எனத் தெரிவித்தனர்.

ஆனாலும் நவநீதம் பிள்ளை பயணிக்க 1 மணித்தியாலம் முன் அவரைச் சந்தித்து இந்த அறிக்கையை மட்டும் நான் கையளிக்க வேண்டும் என கொழும்பில் உள்ள ஜ.நா. இலங்கைக்கான பணிப்பாளரிடம் அவகாசம் கேட்டேன். அதன் பின்னரே இந்த அறிக்கையை நவநீதம்பிள்ளையை சந்தித்து கையளித்தேன்.

அவர் அதனை மேலோட்டமாக வாசித்து விட்டு உரிய நடவடக்கை எடுப்பதாக அந்த அறிக்கையை அவர் எடுத்துச் சென்றார்.

அந்த அறிக்கையில் வட கிழக்கு யுத்த காலத்தில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட சகல சம்பவங்களும் அடங்கப் பெற்றுளளன. அதில் ஹஜ்ஜூக்கு சென்று காணமல் போனவர்கள் தொட்டு காத்தான்குடி, ஏறாவுர், வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றம் என பல தகவல் அதில் அடங்குகின்றன.
யுத்தத்திற்குப் பிறகு இந்த அரசின் நடவடிக்கையினால் அதிலும் அம்பாறை மாவட்டத்திலும் மட்டும் முஸ்லீம்களுக்குரிய காணி 35ஆயிரம் ஏக்கர் காணியை இழந்துள்ளோம்.

இதே போன்று அம்பாறை, திருமலை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் முஸ்லீம்களுடைய இருப்புகள் யுத்தத்தின் பின்பும் முன்பும் அபகரிக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள காட்டுவள திணைக்களம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்,விவசாய முதலீட்டு, பௌத்த ஆராச்சி என பல்வேறு திணைக்களங்கள் ஒன்று சேர்ந்து அம்பாறை மாவட்டத்தில் காணிகளை அபகரித்துள்ளன.

இதனை அரசுடன் பேசினாலும் அதிகாரிகள் அரச திணைக்களங்கள் ஊடாக முஸ்லீம்களது காணிகள் அபகரிக்கப்பு தொடரவே செய்கிறது” என ஹசன் அலி தெரிவித்தார்.

Thursday 6 March 2014

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: தேர்வாளர்கள் பட்டியலில் புதின் மற்றும் ஸ்நோடெனின் பெயர்கள் இடம்பிடித்தது!

Thursday, March 06, 2014
 இந்த ஆண்டின் அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசுக்கான தேர்வாளர்கள் பட்டியலில் இடம்பெறுபவர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது என்று நார்வே மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த நோபல் பரிசு கமிட்டி நேற்று குறிப்பிட்டுள்ளது.
இதில் அமெரிக்காவின் ரகசியத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்நோடென், பாகிஸ்தானின் பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போன்றோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டுதோறும் இந்த தேர்வு பட்டியலில் இடம்பெறுவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது நோபல் பரிசின் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள ஆர்வத்தைக் குறிப்பிடுவதாக, நோபல் நிறுவனத்தின் தலைவரான கிர் லுண்டேஸ்டட் கூறினார். தங்களின் கமிட்டி தேர்வாளர்கள் பட்டியலை ஆய்வு செய்து, தேர்வு செய்யப்படுவோரின் பெயர்களை ஆஸ்லோவில் வரும் அக்டோபர் 10ம் தேதியன்று அறிவிக்க இருப்பதாக அவர் கூறினார். இவ்வாறு தேர்வு பெறுபவர்களின் பெயர்கள் முன்கூட்டி அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

வழக்கம்போல தேர்வாளர்களின் விபரங்களை அறிவிக்க மறுத்த அவர், அமைதி விருதுக்கு வந்திருக்கும் 278 தேர்வாளர்களில் 47 நிறுவனங்களின் பெயர்களும் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். பொதுவாக இந்த தேர்வாளர்கள் பட்டியல் 50 வருடங்களுக்கு ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
தேர்வுக் கமிட்டியின் முதல் சுற்றில்கூட பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படக்கூடும். ஆனால், இதுமட்டுமே கமிட்டியின் ஒப்புதலுக்கான அறிகுறி ஆகாது என்று இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமல் அந்நாட்டின் ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டின்கீழ் அழிக்க முயற்சி மேற்கொண்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் அமைதிக்கான விருதுப் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், தற்போது உக்ரைனின் கிரிமியா பகுதியில் ரஷ்யா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சிகள், புதினுக்கு இந்த விருது கிடைப்பதற்கு எதிரானதாக அமையக்கூடும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன.

சட்டவிரோதமாக இயங்கும் விடுதிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை வடக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும்- யாழ் மாநகர முதல்வர்!

Thursday, March 06, 2014
யாழ். மாநகர சபை எல்லைக்குள் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இயங்குகின்ற விடுதிகளுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று வடக்கு மாகாணம் முழுவதிலும் சட்டவிரோதமாக இயங்குகின்ற விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமென்றும், இதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் அனுமதி பெறப்பட்ட விடுதிகள் இயங்கி வருகின்ற அதே வேளையில், அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமான முறையிலும் சில விடுதிகள் இயங்கி வருகின்றன். இத்தகைய விடுதிகளிலிலேயே சட்டவிரோத மற்றும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.

குறிப்பாக, மாநகர எல்லைக்குள்ள இவ்வாறு இயங்கிய சில விடுதிகள் கடந்த வருடத்திலும் கண்டறியப்பட்டிருந்தது. அதேபோன்று கடந்த வாரமும் சில விடுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, இந்த விடுதிகளில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.

இதற்கான ஆதாரங்கள் தேவையாக இருந்த நிலையில், இந்த விடுதி மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இதற்குரிய ஒத்துழைப்பை வழங்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமையவே சபை அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கலாச்சாரச் சீரழிவு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய சமூக விரோதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது.

இதற்கமைய இவ்வாறான காலாசார சீரழிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர வேண்டும். இதற்கு சமூகத்திலுள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். இவ்வாறான கலாச்சாரச் சீரழிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மாநகர எல்லையில் மட்டுமல்லாது, மாவட்ட ரீதியாக வடக்கு மாகாணம் முழுவதுமே மேற்கொள்ள வெண்டும்.

தமிழ் மக்களின் பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது. இதற்கமைய இதணை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமென மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என் மீது பாய்ந்து விழுந்தார் என்பதற்காக நான் வீட்டில் போய் மூலையில் முடங்கிக் கிடக்க முடியாது- ரவூப் ஹக்கீம்!

Thursday, March 06, 2014
உபாய ரீதியாக அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை விட, நாங்கள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தான் அரசாங்கம் எங்களது பலத்தை சரிவர புரிந்து கொள்ளும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

மேல் மாகாணத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் மரச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கஹட்டோவிட்ட கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீம் உட்பட ஏனைய வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்ட அக் கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

இந்த மேல் மாகாண சபைத் தேர்தலிலும் நாங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்த வேளையில், கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தலைமைத்துவம் வகிக்கும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ என்னிடம் அவர்களுடன் சேர்ந்து கூட்டாகப் போட்டியிடுவதானால் வரவேற்கத்தக்கது என்றும் அது பற்றி ஆலோசிக்க முடியுமா என்றும் கேட்டார்.

முதலமைச்சர் வேட்பாளரிடமிருந்தும் அது தொடர்பில் தமக்கு அழுத்தம் தரப்படுவதாக எமது முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீமும் என்னிடம் கூறினார்.

ஆனால் களநிலவரத்தின் யதார்த்தத்தைப் பொறுத்தவரை, நாங்கள் தனித்துப் போட்டியிடாமல் அரசாங்க கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவது எங்களது ஆசனத்தை இழப்பதற்கே வழிகோலும். நாங்கள் தனித்துப் போட்டியிடுவதில் பிடிவாதமாக இருந்தோம்.

ஆனால் அரசாங்கத்திற்கு அது அஜீரணமாக இருந்தது.
உபாய ரீதியாக அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை விட, நாங்கள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தான் அரசாங்கம் எங்களது பலத்தை சரிவர புரிந்து கொள்ளும்.

அரசாங்க கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு தோற்றுப் போவதால் அபிவிருத்தி வேலைகளை எங்களுக்கு வழமையாக செய்வதை விட சற்றுக் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு தார்மீக கடமை அவர்களுக்கு ஏற்படலாம்.
ஆயினும், இந்த சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அதை விட முக்கியமானது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து அவர்களுக்கு குற்றேவல் புரியும் சுயநலவாதிகளாக சமூகம் எங்களை பார்க்க விரும்பவில்லை.

இந்தக் கட்சி பலமாகவும், தனது பேரம் பேசும் சக்தியை கொண்டதாகவும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதை நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகளும் ஆதரவாளர்களும் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.

அரசாங்க ஆதரவாளர்களுக்கு இதில் ஆட்சேபனை இல்லை. குறிப்பாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காரர்களுக்கு அதை ஜீரணிக்க முடியா விட்டாலும், பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அது வரவேற்கத்தக்கது அல்லதென்பதை களநிலவரம் உணர்த்துகின்றது.

ஒவ்வொரு தேர்தல்களுக்கு முன்பும் அரசில் உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டி ஆராயும் போது எனது பாடுதான் திண்டாட்டமாகிப் போகிறது. அரசாங்கத்தில் இருந்து வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு, தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் விளையாட்டை வைத்துக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி வற்புறுத்திக் கூறுவதுண்டு.

தனித்துக் போட்டியிட்டாலும் அரசாங்கத்தை விமர்சிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு முக்கிய அமைச்சர் ஒருவர் என்னிடம் வினயமாக கேட்டுக் கொண்டார். அரசுக்கும், முஸ்லிம் காங்கிரஸூக்கும் மீண்டும் லடாய் என்றொரு வதந்தி வேகமாக பரவி வருகிறது.

ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேச வேண்டிய விடயங்கள் இருந்தாலும், இந்த சமூகத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் அயராது ஈடுபட்டிருக்கும் இயக்கம் என்ற காரணத்தினால், நாங்கள் தனித்துப் போட்டியிடும் விவகாரம் ஆளும் கூட்டமைப்பு உள்ளவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சந்தர்ப்பவாத கட்சியாக தென்படுகின்றது.

அதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அரசியல் வாதிகள் சிலர் எங்களை தாறுமாறாக விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி ஒரு முழம் பாய்ந்தால் அவர்கள் பத்து முழம் பாய்கிறார்கள்.

அதற்கென முகவரி இல்லாத முஸம்மில் என்ற ஆசாமி ஒருவரை வைத்திருக்கிறார்கள். அந்த நபரை நான் கொஞ்சம் கூட கணக்கில் எடுப்பதில்லை. அமைச்சர் விமல் வீரவங்ச அவருக்கு ஊடக பேச்சாளர் என்ற பதவியை வழங்கி, என்னையும் எமது கட்சியையும் தாக்குவதற்கென்றே அவரைத் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறார்.

முஸ்லிம் பெயர் தாங்கிய ஒருவரை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸை மட்டம் தட்டி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். அப்படியானாவர்கள் பேசப் பேச முஸ்லிம் காங்கிரஸின் மதிப்பு மேலும் மேலும் முஸ்லிம்கள் மத்தியில் உயர்ந்து செல்கிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை.

முஸ்லிம் சமூகத்துடைய இன்றைய உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் எங்களுக்கு எதையும் செய்யா விட்டாலும் பரவாயில்லை, சமூகத்திற்கு நடக்கின்ற அநியாயங்களை காரசாரமாக பேச வேண்டும் என்பதுதான்.
அரசாங்கத்துக்கு உள்ளே இருந்து கதைக்கும் பொழுது எல்லா விடயங்களும் வெளியில் வருவதில்லை.

ஏனென்றால், நாங்கள் அவற்றை வெளியில் வந்து கூறுவதால் இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகி விடும் என்பது மட்டுமல்ல, எங்களைக் காட்டிக்கொடுப்பதற்கு என்றே அரசாங்கத்துக்குள் ஒரு கூட்டம் இருக்கிறது.
இந்தப் பின்னணியில் தான் இப்பொழுது ஜெனீவா விவகாரம் பற்றி ஒரு பெரிய புரளி கிளப்பப்பட்டிருக்கிறது. இது எல்லோரும் அறிந்த விடயம். ஓளித்து மறைத்து பேச வேண்டிய விடயமல்ல.

இன்றைய முன்னேறிவரும் தகவல் தொழிநுட்ப யுகத்தில் ஓரிடத்தில் நடக்கும் சம்பவம் பற்றிய செய்தி உடனடியாக உலகெங்கும் சென்று விடுகிறது.

அரபு நாடுகள் மத்தியில் வித்தியாசமான நிலைப்பாடு ஏற்பட்டு விட்டதென வீணாக எங்களோடு இங்குள்ள அரசியல்வாதிகள் சிலர் கோபிக்கிறார்கள். பொதுபல சேனா, சிஹல ராவய, ராவணா பலய போன்ற இனவாத கும்பல்களின் தீவிரவாதம் வளர்வதற்கு இலங்கை களமாக மாறிவிட்டதென்ற செய்தி அரபு உலகில் நவீன தொழில்நுட்ப வலைப்பின்னல் ஊடாகப் பரவியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.

நாங்கள் சொல்லித்தான் ஏனைய நாடுகள் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்பதல்ல. இராஜதந்திர ரீதியாக இவ்வாறான இனவாத, தீவிரவாத நடவடிக்கைகள் இலங்கையை பாதிப்படையச் செய்யும் என்பதை நான் அரபு நாட்டு பத்திரிகைகளை சுட்டிக்காட்டி வெளிவிவகார அமைச்சரிடம் கூறியிருந்தேன்.

இவ்வாறிருக்க இன்று முஸ்லிம் காங்கிரஸின் மீது மட்டும் குற்றம் சுமத்துவது அல்லது பழியை போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
இந்த அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருப்பது பற்றி இன்று எமது சமூகத்தில் எவ்வளவுதான் கசப்புணர்வு இருந்தாலும், இந்த இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது மிகவும் பிரதானமான விஷயம்.
அரசாங்கத்துக்கு வெளியில் இருப்பது ஆபத்தானது என நியாயமாக சிந்திக்கும் முஸ்லிம்கள் பலர் நினைக்கிறார்கள். வெளியில் இருக்கின்ற பொழுது வரும் பாதிப்புகளை விட, அரசாங்கத்திற்குள் இருக்கும் போது அவை பற்றி கதைப்பதற்காகவது யாராவது உள்ளே இருந்தாக வேண்டும் என்பது காலத்தின் நிர்ப்பந்தம் ஆகும்.

ஆனால், இந்த யதார்த்தங்களை நாங்கள் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். சாணக்கியமாக விடயங்களை அணுக வேண்டும். அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால், அந்த முரண்பாடுகளை பெரிதுபடுத்தி. தூக்கிப்பிடிப்பது முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமல்ல.

ஜனாதிபதி என்மீது கோபப்பட்ட போது நான் அவரிடம் சொன்னதெல்லாம், அது நான் மட்டும் சொல்வதல்ல, பலரும் கூறுகின்ற விடயம் என்பதுதான். அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் கேட்டால் தெரியவரும் என்றேன். என்னோடு காரசாரமாக பேசிய பின்னர் அவரது சகோதரர் பெசில் ராஜபக்ஷ அதுபற்றி என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.

எங்களைப் பொறுத்தவரை களநிலவரங்களைப் பற்றி உண்மைகளைச் சொல்ல வேண்டும். சில உண்மையான தகவல்களை வழங்கியது தவறான விடயமல்ல.

ஜம்இய்யதுல் உலமா, ஷூரா சபை, முஸ்லிம் இயக்கங்களின் ஒன்றியம் என்பவற்றின் பிரதிநிதிகள் எல்லா விடயங்களையும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸை அழைத்து கேட்ட போது எல்லாத் தகவல்களையும் கூறியிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இன்று மிகப்பெரிய வெறுப்பு உருவாகியிருக்கிறது எனக் கூறப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி என்னோடு கோபித்துக் கொண்டு சூடாக பேசிய உடனேயே நான் அமைச்சர் பீரிஸிடம் சென்று உங்களைச் சந்தித்தவர்கள் கூறிய உண்மைகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே என்றேன்.

ஏனென்றால் இரண்டொரு வருடங்களாக தலைதூக்கி வருகின்ற இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத இயக்கங்கள் இந்தச் சமூகத்திற்கு ஒரு பாரிய அச்சுறுத்தல் மாத்திரமல்ல, அதன் விளைவாக இந்தச் சமூகம் அரசாங்கத்திலிருந்து தூர விலகிச் செல்கின்ற நிலைமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது என்ற விடயம் அமைச்சர் பீரிஸூக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி கோபப்பட்டு காரசாரமாக பேசிவிட்டார் என்பதற்காக நான் வீட்டில் போய் மூலையில் முடங்கிக் கிடக்க முடியாது. அதைப் பற்றி எந்த கலக்கமும் இல்லாமல், பதற்றமும் இல்லாமல் நேர்மையாகவும் பக்குவமாகவும் விடயங்கள் சொல்லப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கிறேன்.
நாட்டில் ஒரு நல்லிணக்கம் வரவேண்டும், நாட்டில் நடக்கின்ற எல்லை மீறிய அசம்பாவிதங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

எமது கட்சி அரசாங்கத்தோடு இணைவதில் பாரிய அதிருப்தி இருந்தது. கட்சி உறுப்பினர்களை பறிகொடுத்து விடக் கூடாதென்பதற்காகத்தான் நாம் அரசாங்கத்தோடு இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தான் கட்சியின் பலம். எங்களிடம் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் எங்களிடம் இருந்து பறிபோய் விட்டால் நிலைமை என்ன? இந்தக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடேயே நாம் அரசில் இருக்கிறோம்” என்றார்.

Wednesday 5 March 2014

தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்வதனை தடுத்த மூவர் கைது!

Wednesday, March 05, 2014
தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்வதனை தடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு நீதிமன்றம் குறித்த மூவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இரண்டு மகள்களையும் இராணுவத்தில் இணைக்க விரும்பிய தந்தையை மூ தாக்க முற்பட்டதாகவும் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தில் சேர்வதற்கு மகள்களுக்கு அனுமதி வழங்கிய தந்தையை குறித்த மூன்று பேரும் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியொருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 10ம் திகதி மீண்டும் நடத்தப்பட உள்ளது.

Friday 7 February 2014

புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின் மரணதண்டனை!

Friday, February 07, 2014
புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின்னதாக இன்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்;ப்பளித்துள்ளது.

திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்;கே இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1990 ம் ஆண்டில் திருகோணமலை கடற்பரப்பில் ஆறு பொதுமக்களினை புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சீனன் குடா கடற்படை தளத்தினை அண்மித்த பகுதியில் அவர் சிறைப்பிடிக்கப்பட்ட வேளை அவரது வயது வெறும் 14 மட்டுமேயாகும். சுமார் 14 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். அத்துடன் வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிட பணிக்கப்பட்டுமிருந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின் போதே அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளித்து திருகோணமலை மேல்;நீதிமன்றம் அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday 23 January 2014

பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும், தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை – ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர்!

23 January 2014
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வடக்கில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை கண்டறிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஆராயும் பணிகள்  செவ்வாய்க் கிழமை நிறைவடைந்தது.
 
கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்பணியில் காணமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் விசாரணைகள் இடம்பெறும் விதம் தொடர்பாக நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பராக்கிரம பரனகம கருத்துத்  தெரிவிக்கையில்.
“சுமார் 152 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே முறைப்பாடுகள் செய்தவர்களை தவிர புதிதாகமுறைப்பாடு செய்வதற்கும் பலர் வருகை தந்திருந்தனர். அந்த முறைப்பாடுகளையும் நாம் விசாரித்தோம்.
 
மேலும் புதிதாக முறைப்பாடுகளை செய்தவர்களுக்கு பிறிதொரு தினத்தை ஒதுக்கு வதாக நாம் தெரிவித்தோம். இதனை விசாரிப்பதற்கு அதிகாரம் இருந்தபோதிலும் தண்டனை வழங்கும் அதிகாரம் எமக்கு இல்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எம்மால் முடியாது எமது அறிக்கையின் ஊடாக ஜனாதிபதியிடம் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும். தேவையான ஆலோசனைகளை வழங்கும் அதிகாரம் எமக்குண்டு. தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை.”

Monday 20 January 2014

புலிகளை ஒடுக்கும் பொருட்டு இலங்கை பாதுகாப்பு படைகளுக்குப் பயிற்சி அளிக்க அனுமதித்த பிரித்தானிய அரசு!

sss191Monday, January 20, 2014
இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்குப் பயிற்சியளிப்பதற்கென பிரித்தானியாவின் முன்னாள் விசேட படையணி அதிகாரிகளுக்கு மார்கரட் தட்சரின் பிரித்தானிய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததனை பிரித்தானிய அரச ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன .
 

இதனை அம்பலப்படுத்தியுள்ள த கார்டியன் பத்திரிகை இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 1984 ஜுன் மாதம் இந்தியாவில் உள்ள சீக்கிய மதத்தவரின் புனித ஸ்தலமாகிய அம்ரித்சர் கோவில் வளாகத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கை வரையிலான காலப்பகுதியில் இந்தியப் துருப்பினருக்குப் பயிற்சியளிப்பதில் பிரித்தானிய விசேட படையணி அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்ததைக் காண்பிக்கும் ஆவணங்கள் வெளியாகிய சில தினங்களிலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

கடந்த 1984 ஆம் அண்டு செப்டெம்பரில் பிரித்தானியாவின் அப்போதைய வெளிநாட்டமைச்சர் ஜோப்ரி ஹோவின் பிரித்தியேக செயலாளர் பீட்டர் ரிக்கெட்ஸ் விசேட படையணியுடன் தொடர்புகளைப் பேணிவந்துள்ள பிரித்தானிய நிறுவனமொன்று இலங்கையில் பணியாற்றுவதனை அனுமதிக்குமாறு கோரும் வேண்டுகோள் ஒன்றைப் பற்றி பிரதமர் மார்க்ரெட் தட்சரின் பிரத்தியேகச் செயலாளர் டேவிட் பார்கிளேயுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார் . அந்தச் சமயத்தில் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களில்  புலிகளாலும் ஏனைய குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த கிளர்ச்சி நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்குவதற்கு ஜே . ஆர் . ஜெயவர்தனவின் அரசாங்கம் முயன்று கொண்டிருந்தது .

பீட்டர் ரிக்கெட்ஸ் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததாவது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலான பயிற்சியை வழங்குவதற்கென இன்னுமொரு பிரித்தானிய நிறுவனத்தை ( பெயர் நீக்கப்பட்டுள்ளது ) இலங்கை அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளது . இலங்கையில் முன்னாள் விசேட படையணி அதிகாரிகள் சிலர் உள்ளிட்ட குறித்த நிறுவனப் பணியாளர்களின் பிரசன்னமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் பிரஸ்தாப நிறுவனத்தின் சம்பந்தம் குறித்து இந்திய அரசாங்கம் எமக்கு விசனம் தெரிவித்துள்ளது . இது முற் - றிலும்

வர்த்தகம் சார்ந்த விடயமொன்றெனவும் விசேட படையணிகள் ( எச். எம் . ஜி ) இதில் சம்பந்தப்படவில்லையெனவும் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம் . குறித்த நிறுவனத்திற்கு இலங்கையில் தொடர்ந்தும் பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது .

அம்ரித்சர் சோதனை நடவடிக்கை சம்பந்தமான பிரித்தானியாவின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் டேவிட் கமரெனின் உத்தரவின் பிரகாரம் அமைச்சரவைச் செயலாளர் சேர் ஜெரமி ஹீவூட்டினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையொன்றின் போது இந்த ஆவணங்கள் சமர்பிக்கப்படவுள்ளன .

கடந்த 1984 ஜுனில் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்தியத் துருப்பினரால் மேற்படி கோவில் வளாகத்தினுள் மேற்கொள்ளப்பட்டிருந்த நீல நட்சத்திரம் என அழைக்கப்படும் ஆறு நாள் படை நடவடிக்கையின் போது சுமார் 400 பேர் கொல்லப்பட்டிருந்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது . சீக்கிய வரலாற்றில் இரத்தக்கறை படிய வைத்திருந்த மேற்படி படை நடவடிக்கையிலான பிரித்தானியப் படையணியினரின் வகிபாகம் குறித்து விசாரணையொன்றைக் கோரியுள்ள சீக்கியக் குழுக்கள் யாத்திரீகர்கள் பலர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளன .

 

முடிந்தால் கைது செய்யுங்கள் – ராவண பலயவுக்கு மன்னார் ஆயர் சவால்!

Monday, January 20, 2014
முடிந்தால் தம்மைக் கைது செய்யுமாறு ராவண பலயவுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை சவால் விடுத்துள்ளார்.
 
போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்ட, போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப்பிடம், மன்னார், யாழ். ஆயர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
இதற்கு இராவண பலய அமைப்பு, மன்னார், யாழ். ஆயர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூறியிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மன்னார் ஆயர்,
 
பொய்யான போர்க்குற்றச்சாட்டுகளை நாம் சுமத்தவில்லை.
இது பொய்யான குற்றச்சாட்டு என்றால், வேறெதையும் பேச முன்னர், ராவண பலய முதலில் அதை நிரூபிக்கட்டும்.
 
போரின் இறுதிக்கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே, நாம் இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறோம்.
அவர்களால் பொய் சொல்ல முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, January 20, 2014
எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. அதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
 
யார் என்ன சொன்னாலும் வடக்கு மக்களின் சுபீட்சத்திற்காக மென்மேலும் உதவ தயாராகவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வடக்கில் 60,000 மாக இருந்த படையினரை 12,000 மாகக் குறைத்துள்ளதாகவும் அடிக்கொன்றாக இருந்த படை முகாம்கள் நீக்கப்பட்டு இப்போது அது ஏராளமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
யாழ். தெல்லிப்பழையில் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளஹிrail புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கான கட்டிடங்களை ஜனாதிபதி நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தமது குடும்பத்தில் தமது சகோதரர் புற்றுநோயால் மரணித்ததன் ஞாபகார்த்தமாகவும் மக்கள் எதிர்பார்ப்பின் காரணமாகவும் இரு இளைஞர்கள் இணைந்து எடுத்த முயற்சி இன்று பலனளித்துள்ளது. அந்த வகையில் தெல்லிப்பழையில் புற்றுநோய் ஆஸ்பத்திரியை அமைக்க முன்னின்று உழைத்த அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பில் கெளரவத்தை சமர்ப்பிக்கின்றேன். இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பிற்காக பெருமைப்படுகின்றேன்.
நாம் 30 வருட கொடூர யுகத்தைக் கடந்து சமாதானம், மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டி யெழுப்பியுள்ள யுகத்தில் இது போன்ற செயற்பாடுகளுக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைபவனியாக வந்து அதன் போது சேர்க்கப்பட்ட பணத்திலேயே 300 மில்லியன் ரூபா செலவில் தெல்லிப்பழை Trail புற்றுநோய் ஆஸ்பத்திரி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அனைவரதும் ஒத்துழைப்புகளுடன் இந்த நீண்ட நடைபவனி பருத்தித்துறை வரை வருவதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியுற முடிகிறது.
 
யார் என்ன சொன்னாலும் இது எமது மக்களுக்குக் கிடைத்த சிறந்த நன்மை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். வெளிநாட்டி லுள்ளவர்கள் என்ன கூறினாலும் இந்த நாட்டு மக்கள் இந்த உண்மையை யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம நீதியரசராக இருந்து எமது கெளரவத்தைப் பெற்றுக் கொண்டவராவர். அவர் மிக விரைவாக அரசியலுக்குள் பிரவேசித்தமை தொடர்பிலும் அனைத்து மேடைகளையும் தமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் எம் போன்றவர்களுடன் இணைந்து கொள்வதை எண்ணி நான் சந்தோஷப்படுவதா கவலையடைவதா என்பதைக் கூற முடியாதுள்ளது.
 
எவ்வாறாயினும் எம் அனைவரினதும் எதிர்பார்ப்பு இந்த நாட்டில் அனைத்து
மக்களும் சமாதானம் மகிழ்ச்சியுடன் வாழ்வதே.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல விடயங்களை முன்வைத்தார். அவருக்கு நான் கூற விரும்புவது:-
 
இந்த நாட்டில் ஒரு யுகம் இருந்தது. அந்த யுகத்தில் அவர் இங்கு வந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு அடி தூரத்திலும் முகாம்கள் நிரம்பியிருந்தன. 60,000ற்கும் 75,000ற்கும் இடைப்பட்ட இராணுவத்தினர் வடக்கில் மாத்திரம் கடமையில் இருந்தனர். அன்றிருந்த முகாம்கள் இப்போது பத்து அல்லது ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் 12,000மாக குறைக்கப்பட்டுள்ளனர்.
 
இராணுவம் முழு நாட்டிலும் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டும். இன்று நான் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தைப் பார்த்த போது; “இராணுவத்தினரை விலக்கிக் கொள்வசதால் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. இது தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதுமில்லை.
 
நாம் இந்த நாட்டில் பிறந்தவர்கள், எம் அனைவரது உடலில் ஒரே நிறமாக சிவப்பு இரத்தமே ஓடுகிறது. எமக்குள்ள உணர்வும் வேதனையும் அனைவருக்குமே உள்ளது.
 
புற்று நோய் என்பதும் ஒரு இனத்துக்கோ அல்லது குழுவுக்கோ வரும் ஒன்றல்ல. அதனால் சகல மக்களும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதனால் இத்தகைய அனைத்து மக்களுக்கும் சமமாக சிகிச்சையளிப்பதற்கு சமமாகக் கவனிப்பதற்கு நாம் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம். அவற்றை செயற்படுத்த எப்போதும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
 
கொடூர யுத்தம் முடிவடைந்து குறுகிய 4 வருட காலத்திற்குள் 14 மாதங்களே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நேரம் கொடுக்க முடிந்தது. ஏனைய காலங்களில் நாம் கண்ணிவெடிகளை அகற்றவும் அடிப்படைத் தேவைகளை வழங்கவும் மூன்று இலட்சம் மக்களை மீளக் குடியேற்றவும் மின்சாரம் உட்பட தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க நீரைப் பெற்றுக் கொடுக்க வடக்கிற்கு மீள ரயிலைக் கொண்டுவர என பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இவை குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேவேளை 14,000 பேருக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்துள்ளோம்.
 
மாகாண சபை தேர்தல் உள்ளூராட்சி சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என தேர்தல்கள் நடத்தி அவற்றின் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முழு நாட்டுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:- வட மாகாண மக்களுக்கு இது முக்கியமான நாள். இந்த புற்றுநோய் ஆஸ்பத்திரி மூலம் வடமாகாண மக்களுக்கு பெரும் நன்மையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதற்கு 300 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
 
இந்த வருடம் வரவு செலவுத் திட்டம் மூலம் 157 பில்லியன் ரூபாவை சுகாதார சேவை மேம்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளோம். இந்தப் புதிய ஆஸ்பத்திரி மஹரகம புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நிகரானது. 120 கட்டில்கள் இங்கு வார்டுகளில் உள்ளன. இது சிறப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
நீங்கள் தவறான வழியில் போக வேண்டாம். நாம் வட பகுதி மக்களுக்காக பல வசதிகள் செய்துள்ளோம்.
 
அதேவேளை வடக்கு மக்கள் மாகாண சபையின் சேவைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம். யார் என்ன சொன்னாலும் தொடர்ந்து மக்களுக்கு உதவ நாம் ஆயத்தமாக உள்ளோம். உங்கள் பிரதேசமும் உங்கள் பிள்ளைகளும் மென்மேலும் முன்னேற வேண்டும்.
 
ம் இந்த நாட்டின் மக்கள். தவறான பிரசாரத்தை நம்ப வேண்டாம். கோபம், குரோதம் இன்றி அனைவரும் இணைந்து வாழ்வதே எமது நோக்கம் எனவும் ஜனாதிபதி தமிழில் தெரிவித்தார்.

யாழில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தம்பிராசா மீது கழிவு ஆயில் வீசித் தாக்குதல்!

Monday, January 20, 2014
யாழில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தம்பிராசா மீது இனந்தெரியாதோர்கள் நேற்று  அதிகாலை கழிவு ஒயில் வீசித் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
 
வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்குமாறு வலியுறுத்தி, அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவருமான தம்பிராசா உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.
 
கடந்த வியாழன் முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் கழிவு ஒயில் வீசித் தாக்கியுள்ளனர்.
 
இதனையடுத்து, சம்பவம் குறித்து யாழ். பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், சம்வவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sunday 19 January 2014

ஜனாதிபதி மகிந்த ராஐபக்சவினால் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது!

Sunday, January 19, 2014
தெல்லிப்பழையில் “கலர்ஸ் ஒவ் கரேஜ்” அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், மேற்படி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
 
இப்புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக நிர்மாணிக்கும் பொருட்டு டிரைல் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் �மாஸ் இன்டிமேட்� நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாதன் சிவகணநாதன் மற்றும் அவரது நண்பர் சரித்த உனப்புவ ஆகியோர் தலைமையில் தெற்கே தெய்வேந்திரமுறை முதல் வடக்கே பருத்தித்துறை வரையில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டதன் பயனாக 300 மில்லியன் ரூபா நிதியினை சேகரித்திருந்தனர். 2011 ம் ஆண்டு தொடங்கப்பட்ட 670 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்தப் பாதயாத்திரையின் போது 35,000 பேர் கலந்து கொண்ட அதேவேளை 12 பேர் மட்டுமே முழுமையாக பங்கெடுத்திருந்தனர்.
 
2,50,000 பேர் வழி நெடுகிலும் இனமத பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து உதவிகளைப் புரிந்துள்ள நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
 
இவ்வைத்தியசாலை அமையப் பெற்றுள்ள காணியினை பிரபல தொழில் அதிபர் ஈ.எஸ்.பி நாகரட்ணம், உடுவிலைச் சேர்ந்த மாணிக்க சோதி அபிமன்னசிங்கம் ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
 
பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டமையப் பெற்றுள்ள இவ் வைத்தியசாலையில் பிரத்தியேகமான பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுவர் விடுதி, சிறுவர் பூங்கா என்பன அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 120 கட்டில்களும் போடப்பட்டுள்ளன.
 
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலையின் மூலமாக யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது வடக்குமாகாண மக்களும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வைத்தியசாலையினை ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் வைத்தியசாலையின் ஏனைய தொகுதிகளையும் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதனிடையே அதியுயர் கதிர்வீச்சு பிரிவு அமையப் பெறவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டி வைத்தார்.
 
முன்பதாக பிரதான வாயிலிலிருந்து மங்கள வாத்தியம் சகிதம் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அவர்கள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க சகிதம் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்;டார்.
 
அரங்க நிகழ்வில் புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிர்மாணப் பணிக்கான நடைபயணம் தொடர்பில் டிரைல் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும், மாஸ் இன்டிமேட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாதன் சிவகணநாதன் மற்றும் சரித்த உணப்புவ ஆகியோர் விளக்கமளித்தனர்.
அத்துடன், நடைபயணத்தை தொடங்கி இறுதிவரை நிறைவு செய்த 12 பேருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் கவர்ஸ் ஒப் கரேஜ் விருது வழங்கி கௌரவித்தார்.
 
இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), பாராளுமன்ற உறுப்பினர் சிரான் விக்கிரமரட்ன, ஹர்ஸ டி சில்வா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.