Sunday 19 January 2014

புத்தாண்டுக்கு முன்னர் வலி.வடக்கில் மீள்குடியேற்றுங்கள்: யாழ் வரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Sunday, January 19, 2014
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைத் திறப்பதற்கு வரும் ஜனாதிபதி, எங்கள் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை விடுவிப்பது எப்போது என்று கேள்வியெழுப்பியுள்ள வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக்குழு எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வலி.வடக்கு மக்களை முழுமையாக மீளக்குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

தெல்லிப்பழையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ளவரும் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்கு இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகின்றார்.

அவர் கலந்து கொள்ளும் வைத்தியசாலையின் பின்புறத்துடன் உயர்பாதுகாப்பு வலயம் தொடங்குகின்றது. அந்த வேலிகளைத் தகர்த்தெறிந்து மக்களை மீளக்குடியமர்த்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் வைத்தியசாலையைத் திறக்கும் ஜனாதிபதி மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

கடந்த 24 வருடங்களாக இடம்பெயர்ந்த அல்லல்படும் எமது மக்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் எமது சொந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment