Thursday 6 March 2014

சட்டவிரோதமாக இயங்கும் விடுதிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை வடக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும்- யாழ் மாநகர முதல்வர்!

Thursday, March 06, 2014
யாழ். மாநகர சபை எல்லைக்குள் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இயங்குகின்ற விடுதிகளுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று வடக்கு மாகாணம் முழுவதிலும் சட்டவிரோதமாக இயங்குகின்ற விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமென்றும், இதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் அனுமதி பெறப்பட்ட விடுதிகள் இயங்கி வருகின்ற அதே வேளையில், அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமான முறையிலும் சில விடுதிகள் இயங்கி வருகின்றன். இத்தகைய விடுதிகளிலிலேயே சட்டவிரோத மற்றும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.

குறிப்பாக, மாநகர எல்லைக்குள்ள இவ்வாறு இயங்கிய சில விடுதிகள் கடந்த வருடத்திலும் கண்டறியப்பட்டிருந்தது. அதேபோன்று கடந்த வாரமும் சில விடுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, இந்த விடுதிகளில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.

இதற்கான ஆதாரங்கள் தேவையாக இருந்த நிலையில், இந்த விடுதி மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இதற்குரிய ஒத்துழைப்பை வழங்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமையவே சபை அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கலாச்சாரச் சீரழிவு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய சமூக விரோதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது.

இதற்கமைய இவ்வாறான காலாசார சீரழிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர வேண்டும். இதற்கு சமூகத்திலுள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். இவ்வாறான கலாச்சாரச் சீரழிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மாநகர எல்லையில் மட்டுமல்லாது, மாவட்ட ரீதியாக வடக்கு மாகாணம் முழுவதுமே மேற்கொள்ள வெண்டும்.

தமிழ் மக்களின் பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது. இதற்கமைய இதணை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமென மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment